உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி இடி மின்னல் தாக்கியதால் சேதமடைந்துள்ளது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடும் இடிமின்னல் ஏற்பட்டது. இதனால் மூவர் உயிரிழந்திருந்தனர்..
இந்த மின்னல் தாக்கத்தினால் புகழ்பெற்ற தாஜ்மஹால் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது. தாஜ்மஹாலின் பிரதான மசூதியின் தடுப்புச்சுவர் ஒன்று மின்னலினால் சேதமடைந்துள்ளது.
இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த தொல்லியலாளர் வசந்தகுமார் ஸ்வார்ன்கர் இது தொடர்பாக கூறுகையில், மூலக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்த கற்சுவர் ஒன்று சேதமடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பளிங்குக் கற்களிலான தடுப்புச் சுவர் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். எனினும் பிரதான கட்டடத்துக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என அவர் மேலும் கூறினார்.