நமது வாழ்வில் பெரும்பாலான பாகம் உழைப்பதிலேயே முடிந்து விடுகின்றது.
வாழ்வதற்காக உழைக்கப் புறப்படும் நாம் ஈற்றில் வாழ்க்கையை தொலைத்து உழைப்பிலேயே அழுந்தி முதலாளிகளின் வயிற்றை கொழுக்கவைத்துவிட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றோம்.
நமது சமூகம் எப்பொழுதுமேயே பகட்டு வாழ்வை வாழும் சமூகமாகவே வரலாற்றில் பதிந்திருக்கின்றது.
மற்றவருக்காய் வாழ்வது என்பதே நம் வாழ்வின் அடிப்படையாய் இருக்கின்றது.
நாலு பேர் நாலு விதமாய் என்பதற்காய் நாம் அரும்பெரும் வாழ்வை வாழ முற்படாமல் தொலைத்துக்கொண்டிருக்கின்றோம்.
‘நல்லா படி பிள்ளை அப்ப தான் அரசாங்க வேலைக்கு போகலாம்’
‘கெம்பஸ் போய் படிச்சால் பெரிய உத்தியோகம் கிடைக்கும்’ என்று பிள்ளைகளை பாடசாலைகளுக்கும், தனியார் வகுப்புக்களுக்கும் அனுப்பும் பெற்றோர்களை நாம் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் இந்த நவீன கல்விமுறை என்னத்தை சாதித்திருக்கின்றது என்றால் அது எம் வாழ்வில் பெரும் ஏமாற்றத்தையே தருகின்றது.
இந்தக் கல்விமுறைமை பெருமளவில் தோல்வி கண்டிக்கின்றது. இந்தக் கல்விமுறைமை ‘பதி பதி பெத்தம்மா’ என்று சொன்னால் பணிந்து போகக்கூடிய பொரயிலர் கோழிகளைத்தான் உருவாக்கி வெளித்தந்திருக்கின்றது.
முதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பயந்து சலாம் போடும் குமாஸ்தாக்களை தான் இந்தக் கல்விமுறைமை உருவாக்கியிருக்கின்றது.
இந்தக்கல்விமுறையில் சிறந்த ‘கெட்டிக்கார்கள்’ என்ற முத்திரை சான்றிதழ் கொடுக்கப்பட்ட யாவருமே வாழ்க்கையை வாழ துணிவற்றவர்களாக, தமது வாழ்விற்கான முடிவெடுக்க முடியாத கோழைகளாக உள்ளனர் என்பது யதார்த்தம்.
பள்ளிக்கூட கல்வியில் தோற்றுப்போன பெரும்பாலானவர்கள் படித்து பெரிய உத்தியோகம் செய்யும் அதிகாரிகளுக்கு கட்டளையிடும் அரசியல்வாதிகளாய், தனவந்தர்களாய் இருப்பதை எம் அன்றாட வாழ்வில் காணமுடிகின்றது.
இந்தக் கல்விமுறைமை புத்தகத்தில் உள்ளதை பாடமாக்கி பரீட்சையில் பிரதிபண்ணும் இயந்திரங்களை உருவாக்கியுள்ளதே தவிர உருப்படியாய் எதனையும் செய்யவில்லையென்பதே களநிலவரம்.
தொடர்ந்தும் புத்தகங்களுக்குள் அடைபட்டு கோழைகளாய் வாழ முற்படாமல் துணிந்தவர்களாய் மாற வாழ்க்கை எனும் பள்ளியில் கற்க ஆரம்பிப்போம் துணிந்து…..
– பிரதம ஆசிரியர் –