ரஷ்யாவின் வெற்றி நாள் அணிவகுப்புக்கான ஒத்திகையில் பங்கேற்ற சுமார் 15,000 படைவீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்னும் காரணத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழிவதிலும் கொரோன வைரசுக்கெதிரான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ள நிலையில், இந்த மாத தொடக்கத்தில், முகமூடிகள் இல்லாமல், ஒத்திகைக்காக குழுமமாக அணிவகுத்து நிற்கும் பெருந்தொகையான துருப்புக்களை கொண்ட காணொளி ஒன்று நாட்டிலே கசிந்ததையொட்டி ரஷ்யா முழுவதும் அதிர்வலைகள் எழுந்தன.
வெற்றி நாள் அணிவகுப்பில் அணிவகுத்துச் செல்ல ஒரு குழுவை அனுப்பும் நகிமோவ் கடற்படைக் கல்லூரியைச்சேர்ந்த (Nakhimov naval academy) பல பணியாளர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அமைச்சகம் கூறியது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் யாரும் ஒத்திகையில் பங்கேற்கவில்லை என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 15000 படையினர் தனிமைப்படுத்தப்படுள்ளனர்.
ஏப்ரல் 16 அன்று, நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin), இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய வெற்றியைக் குறிக்கும் 2020 மே 9 கொண்டாட்டங்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
சமீப நாட்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கள் ரஷ்யாவில் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 19 அன்று, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகூடிய ஒருநாள் தொற்று எண்ணிக்கையாக 6,060 க்கும் மேற்பட்டவர்கள் உறுதிப்படுத்தப்பட்டுனர். முக்கிய நகரங்கள் மார்ச் 30 முதல் பூட்டப்பட்டுள்ளன, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அல்லது மருத்துவ அவசரநிலைகளுக்கு மாத்திரமே மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.