கடந்த இலங்கை யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிடம் நான் அன்று கேள்வியெழுப்பி இருந்தேன் என்று அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான முன்னாள் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ராப் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த “இலங்கை : நீதி, சட்டம் ஒழுங்கு, மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான தேடல்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஐ.நா.வின் முன்னாள் உதவி செயலாளர் நாயகம் சார்ல்ஸ் பீட்ரே, ஐ.நா.வின் முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பப்லே டி கிறீப் ஆகியோரும் இலங்கையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முஸ்லிம்காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ், மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் பவானி பொன்சேகா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், சமாதானம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் செரீன் ஷரூர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் இக்கலந்துரையாடலை, இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரையின் பணிப்பாளர் மெலிஷா ட்ரிங் வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.