வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கலுக்கான தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வானது இம்முறையும் வழமைபோன்று இடம்பெறும் என முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
தீர்த்தம் எடுப்பதற்கென அனுமதிக்கப்பட்ட குழுவினர் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, ஊற்றங்கரை பிள்ளையார் ஆலய வழியாக முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியூடாக சென்று சிலாவத்தை தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுக்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காட்டா விநாயகர் ஆலயத்தில் இன்று இரவு 12 மணிக்கு மடை பரவப்பட்டு உப்பு நீர் விளக்கு எரிக்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கு எரிக்கப்படும் அற்புதக் காட்சி இடம்பெறும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வற்றாப்பளை அம்மனின் புனித காரியமான தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக 30 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 30 பேரைத் தவிர ஏனைய எவரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பதுடன், தீர்த்தக்குடம் திரும்பி வரும்போது தேங்காய் உடைப்பவர்கள் ஒரு தேங்காயை உடைத்து வழிபாடு செய்யலாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.