இனிவரும் காலங்களில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்று எச்சரித்து 26 மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
காரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 26 பேரும் கடற்படையினரால் படகுகளில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை, தடை செய்யப்பட்ட இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வழக்கின் காத்திரத்தன்மையை இந்திய மீனவர்கள் தரப்பு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, நீதிபதி நேரடியாகவே மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் முடிவில், மீனவர்கள் பயணித்த நான்குபடகுகள், மீன்களின் ஒலியை கண்டறியப் பயன்படுத்திய எக்கோ இயந்திரம், தொலைபேசிகள், மீன்பிடி வலைகள் உட்பட அனைத்துப் பொருட்களும் அரசுடைமை ஆக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
அதன் பின்னர் மீண்டும் குறித்த மீனவர்கள் மீண்டும் இலங்கைக் கடற்பரப்புக்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாவே இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எச்சரித்து விடுதலை செய்தார்.