இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை திரும்பச் செய்யும் நோக்கில் நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பகுதிகளில், எதிர்வரும் முதலாம் திகதி வரை தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு காலத்தில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபடுமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், புதன்கிழமை ஆகிய இன்றைய தினத்தில், 5 மற்றும் 6 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கங்களைக் கொண்டுள்ளவர்கள் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.