வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரில் அதிகமானவர்களை எதிர்காலத்தில் மத்தள விமான நிலையம் மூலம் அனுப்பிவைக்க எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
கொரியாவில் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டு விடுமுறைக்காக நாட்டிற்கு வந்த இலங்கைப் பணியாளர்கள் விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கொரியா நோக்கி செல்வதற்காக மத்தள விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் அவர்கள் மத்தியில் பணியகத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்ததாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மீள புத்துயிரூட்டும் வகையில் பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுத்துவதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினூடாக அமைச்சர் தினேஷ் குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி தென்கொரியாவிலிருந்து நாட்டிற்கு வந்தவர்களை மீண்டும் தமது தொழில் தளங்களுக்கு அனுப்பிவைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஞாயிற்றுக்கிழமை பலர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் அந்நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த லுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தொழில்களில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.