தங்களதும், நாட்டு மக்கள் ஏனையவர்களதும் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ரமழான் பண்டிக்காலத்தில் வீடுகளில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்களின் நோன்புப் பெருநாளுக்கு முன்னரான நோன்பு நோற்கும் காலம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வரும் கோவிட் – 19 தொற்று காரணமாக முழு உலகமும் பாரிய பிரச்சினையை எதிர் நோக்கியுள்ள சந்தர்ப்பத்திலேயே இந்த வருட நோன்பு காலம் பிறந்துள்ளது.
கொரோனா வைரஸ் என்பது பணத்தினாலோ அல்லது அதிகாரத்தினாலோ கட்டுப்படுத்த முடியாத உலகளாவிய தொற்று நிலைமையாக காணப்படுவதாகவும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இந்த தொற்று நிலைமை காரணமாக அனைத்து முஸ்லிம்களும் சமய, கலாசார, சமூக ரீதியாக பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த வருடம் ஏனைய வருடங்களை விடவும் வித்தியாசமானதாக அமைந்துள்ளதாகவும், ஆகையினால் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே அனைவரது பொறுப்பும் கடமையுமாகக் காணப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆன்மீகப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதே ரமழான் கால நோன்பின் நம்பிக்கையாகும் என்பதினால், அந்த தன்னலமற்ற குறிக்கோளை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நாம் அனைவரும் நாடு என்ற வகையில் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்