நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கான பட குச் சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகர் எப்.சி.சத்தியசோதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நெடுந்தீவு குறிகாட்டுவான் படகுச் சேவைகள் கடந்த மார்ச் 20 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கான படகுச் சேவைகள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் மீளவும் வழமைபோன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இக் கடல்பரப்பில் சேவையில் ஈடுபடும் வடதாரகை எனும் படகானது இன்று காலை 8 மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் குறிகாட்டுவானை வந்தடைவதுடன், ஏனைய படகுச் சேவைகளும் இன்றுமுதல் வழமைபோன்று இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பேணிய வகையில் பொதுமக்கள் படகுகளில் பயணிக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளதால் மேலதிக படகுகளும் இன்றுமுதல் சேவையில் ஈடுபடும் என பிரதேச செயலர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது