நீதிமன்றத்தினால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போத அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது பலம் வாய்ந்ததொரு வெற்றியாகும், பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கு எதிர்த்தரப்பினர் முன்னெடுத்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.
தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த நீதியரசர் குழாம் அவற்றை முழுமையாக இரத்து செய்துள்ளனர்.
எதிர்த்தரப்பினர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் இன்று தோல்வியடைந்துள்ளன.
நல்லாட்சி அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளான தேர்தல் உரிமையினை தொடர்ந்து பிற்போட்டது. இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் கடந்த அரசாங்கம் பிற்போட்டதை தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமையவே உள்ளுராட்சி மன்றத்தேர்தல் 2018ம் ஆண்டு இடம் பெற்றது.
மாகாண சபை தேர்தலும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.
எதிர்த்தரப்பினர் தங்களின் கட்சி உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட முயற்சி செய்தார்கள். இவர்களது முயற்சி நீதிமன்றத்தினால் தோற்கடிக்கப்பட்டது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பினை கருத்திற் கொண்டு தேர்தல் ஆணைக்குழு பொதுத்தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகவும் உள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உரிய ஒத்துழைப்பினை வழங்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.