சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை புறந்தள்ளி கோட்டாபய அரசு மக்களை தேர்தலுக்காக ஆபத்தில் தள்ளப்போகின்றதா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை புறந்தள்ளி கோட்டாபய அரசு மக்களை தேர்தலுக்காக ஆபத்தில் தள்ளப்போகின்றதா என கேள்வி எழுகின்றது.
தேர்தலுக்காக மக்களை ஆபத்துக்குள் தள்ளிவிடாதீர்கள் என அரசிடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக சுகாதார திணைக்களத்தின் அறிவுரைகளை கேட்காமல் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக அவசரமாக செயற்பட்டு வருகின்றது.
இது மக்களுக்கு பாதகத்தன்மையை ஏற்படுத்தலாம் என்றே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இது மக்களுக்கு பாரிய விளைவுகளை உருவாக்கலாம். இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 250 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறானதொருநிலையில் கொரோனா அச்சுறுத்தலானது தொடர்ச்சியாக நாட்டில் இருப்பதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.
எனினும், அரசாங்கம் அவர்களின் கருத்துக்களை செவிமடுக்காது தேர்தலை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றது.
இது மக்களுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
நடைபெறவுள்ள தேர்தலானது ஜனநாயகமாக நடைபெறுமா என்ற கேள்வி உள்ளது.
ஏனெனில் கருத்து சுதந்திரம் வெளியிட முடியாத வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
தேர்தல் காலங்களில் மக்களுக்கு தமது கருத்துக்களை பகிர அரசியல் கட்சிகளுக்கு சந்தர்ப்பங்கள் வழங்க வேண்டும்.
நடைபெறவுள்ள தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறுகின்றதா என்பதை உறுதிப்படுத்த சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும்.
எனவே, அரசாங்கம் இவை தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலனை முன்னிறுத்தி முதலில் செயற்பட வேண்டும்.
நாட்டில் பல மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
தளர்த்தப்படும் இடங்களில் அச்சுறுத்தல் ஏற்படாதா என்றும், மக்களுக்கு மீண்டும் தாக்கங்களை ஏற்படுத்தாத என்பதை ஆராய்ந்து அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளதா என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
சுகாதாரத்துறையினரின் கருத்தை இலங்கை அரசாங்கம் கேட்டு செயற்பட வேண்டும்.
அதனை விடுத்து தேர்தலை எவ்வாறாயினும் நடத்திவிட வேண்டும் என்ற நோக்கில் செயற்படக்கூடாது.
கோட்டாபய அரசு இரண்டு காரணிகளை வைத்தே எப்படியும் தேர்தலை நடத்த வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளனர்.
அதில் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிரித்துள்ளனர்.
அவர்களின் பிளவுகளை சாதகமாக்கி வாக்கினை அதிகமாக பெறமுடியும்.
மற்றையது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தினோம் என்ற பிரச்சாரம் போன்றவற்றை கருத்திற்கொண்டே அரசு தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.