போராட்டத்தின் முதல் வித்தாகிய சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் நாளை சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேசசபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
பொன். சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் பொலி ஸாரின் சுற்றிவளைப்பில் சயனைட் அருந்திய நிலையில் வீரச்சாவினை தழுவிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரின் திருவுருவச்சிலை அமைந்துள்ள உரும்பிராய் சந்தியில் நாளைய தினம் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பொது அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அனைவரும் இவ் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் முகமாகவே இந் நிகழ்வு சனிக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், சமூக இடைவெளி யுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.
அஞ்சலி செலுத்தும் பகுதி துப்புரவு செய்யப்பட்டு தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந் நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிந்திருப்பது கட்டாயம் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.