கடந்த ஒரு மாத காலமாக வீட்டோடு வாழ்ந்து, எமது சமூக சூழலில் கொரோனா வைரஸ் தாக்கத்தை நாம் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்துள்ளோம்.
பெரிதும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் யாழ். மாவட்டமும் ஒன்றாகும்.
இறைவனின் இரக்கத்தால் நாம் இதுவரை பெரிதும் பாதிக்கப்படவில்லை. அதற்கான காரணம் மக்களாகிய நீங்கள் அரசின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கீழ்ப்படிந்து வாழ்ந்தமையே ஆகும்.
இன்று யாழ் மாவட்டத்தில் அரசு மீண்டும் ஊரடங்கைத் தளர்த்தியுள்ள நிலையில், மக்கள் கூடுதலான எண்ணிக்கையில் செறிவாக கூடிவருவதை அவதானிக்க முடிகிறது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மாவட்டச் செலயகம், யாழ் கட்டளைத் தளபதி, யாழ் மாவட்டத்தில் ஊரடங்கை அவசரமாக தளர்த்த வேண்டாம் எனக் கோரிய போதிலும் அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
ஆகவே கொவிட் – 19 இன் அச்சுறுத்தல் இன்னும் யாழ் மாவட்டத்தில் உண்டு என்பதே உண்மை நிலையாகும். ஆகவே ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் யாழ் மக்களாகிய எமக்கு வேண்டாம். எதிர்வரும் இரு வாரங்களுக்காவது தொடர்ந்து விழிப்பாக இருப்போம்.
மத வழிபாடுகள், பொது ஒன்றுகூடல்கள், வீண் களியாட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றை இக்காலத்தில் தவிர்த்துக்கொள்வோம். அவசர தேவைகளில் மட்டும் பத்துப் பேருக்கு மேலாக ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்வோம்.
அவசர தேவைகளுக்கு மட்டும் வீட்டில் உள்ள ஒருவரோ அல்லது இருவரோ வெளியில் சுகாதார வழிமுறைகளைப் பேணிப் பயணிப்போம். முகக்கவசம் அணிவோம். சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்போம்.
நாம் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதன் வழியாக சமூக நலனைப் பேணுகின்றோம் என்ற உணர்வை இக்காலத்தில் மேம்படுத்துவோம்.
இறைவன் நம் மக்களையும். நகரையும் இக்கொடிய நோயின் தாக்கத்தில் இருந்து பேணிக் காப்பாராக.