நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும், சமூக நலக் கொடுப்பனவுகளை பெறுவதில் யாராவது தவறியிருந்தால் அவர்கள் அக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட சமுர்த்தி அதிகாரி ஐ.அலியார் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இவ்வாறான சமூக நலக் கொடுப்பனவுகள் முதலாம் கட்டமாக ஏப்ரல் மாதத்திலும் இரண்டாம் கட்டமாக மே மாதத்திலும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் மூன்றாம் கட்ட கொடுப்பனவுகள் 4 ஆயிரத்து 292 குடும்பங்களுக்கு இந்த வாரத்திற்குள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் கட்ட நிதியினை பெறுவதற்கு யாராவது தவறியிருந்தால் அவர்கள் தங்களது கிராம அலுவலர் ஊடாகப் பிரதேச செயலாளரிடம் விண்ணப்பம் செய்து இக் கொடுப்பனவுகளைப் பெற முடியும் என மன்னார் மாவட்ட சமுர்த்தி அதிகாரி ஐ.அலியார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.