T24 Tamil Media
இலங்கை

ஊடகவிலாளர் நடேசன் படுகொலை – நினைவுமீட்டல்

31.05.2004 ஊடகவிலாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட தினம்.

கிழக்கின் ஒரு தலை சிறந்த ஊடகவியலாளன் மறைந்த தினம் மாத்திரமல்ல, அதுவரை தமிழ் ஊடக்ததுறைக்கு மிகப் பெரிய ஊடக ஜாம்பாவான்களை வழங்கிக்கொண்டிருந்த மட்டக்களப்பு ஊடகத்துறையில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகக் காரணமான தினம் என்றும் அதனைக் குறிப்பிடலாம்.

கிழக்கு ஊடகத்துறை வரலாற்றில் எனது அப்பப்பாவான – பற்றிக் டேவிட் ‘SUN’ பத்திரிகையின் மட்டக்களப்பு செய்தியாளராகக் கடமையாற்றியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதைப்போன்று எனது மாமனாரான ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் ஊடகத்துறையில் பணியாற்றியதை சிறு வயதில் நேரடியாகக் கண்டிருக்கின்றேன். நான் ஊடகத்துறைக்குள் நுழைந்த பின்னர் நான் பார்த்து வியந்து நின்ற சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்கள் என்றால் அது நடேசன் அண்ணன், சிவராம் அண்ணன், துரைரெத்தினம் அண்ணன், உதயன் அண்ணன் போன்றவர்கள்தான்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு வழிகாட்டிகளாக நான் கொண்டிருந்தேன்.

நடேசன் அண்ணணின் வேகம் கண்டு பல தடவைகள் அதிசயித்திருக்கின்றேன். வீரகேசரி பத்திரிகையில் பேனா கொண்டு கொலோச்சிய ஒரு மனிதர். ஒரு மனிதனால் தினமும் எப்படி இத்தனை செய்திகளை சேகரிக்க முடியும்.. எப்படி அவற்றை தடையில்லாமல் வழங்கமுடியும் என்று நடேசன் அண்ணனைப் பார்த்து பல தடவைகள் வியந்திருக்கின்றேன். செய்தி மூலங்களை அடையாளங் காண்பதிலும், செய்தி மூலங்களின் தொடர்புகளைக் கவனமாகப் பேணுவதிலும் நடேசன் அண்ணணுக்கு நிகர் நடேசன் அண்ணன்தான்.

கருணா பிரிந்து, மட்டக்களப்பை விட்டு வெளியேறி, பின்னர் கருணா குழு என்ற பெயரில் பிள்ளையானும், குகணேசனும் மட்டக்களப்பில் படுகொலைகள் புரிந்துகொண்டடிருந்த நேரம் அது.

மரணத்தை விட ‘மரணபயம்’ எத்தனை கொடுமையானது என்று நாங்கள் ஒவ்வொரு ஊடகவிலாளர்களும் உணர்ந்த தருணங்கள்..

பேராசிரியர் தம்பையா படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் மட்டக்களப்பு பொதுச் சந்தையில் வைத்து நடேசன் அண்ணனைச் சந்தித்த போது, “பயப்படவேண்டம் … குலைக்கிற நாய் கடிக்காது’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளரும், பொருளியல் பீடத் தலைவருமான தம்பையா பிள்ளையான் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக யாழ்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட ஒரு ஊடகவயலாளரே கொல்லப்படலாம் என்ற எச்சரிக்கை எங்களை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கியிருந்தது.

துரை அண்ணணை கிட்டத்தட்ட பலவந்தமாகவே அவரது பூர்வீகமான பருத்தித்துறைக்கு அனுப்பிவைத்திருந்தோம்.

நடேசன் அண்ணன் படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய தினம் என்னைச் சந்தித்த போது “கொஞ்சம் கவனமாக இருங்கள்.. ஒரே வழியால் தொடர்ந்து பயணம் செய்வதை தவிருங்கள்.. வேறு வேறு இடங்களில் மாறி மாறித் தங்குங்கள்..” என்று, கொலையில் இருந்து தப்பும் வழிமுறைகள் பலவற்றை கூறி எச்சரித்திருந்தார்.

மறுதினம் எல்லை வீதியில் ஒரு ஊடகவியலாளர் கொல்லப்பட்டு கிடக்கிறார் என்ற செய்தி கேட்டு அங்கு போன எனது மைத்துனர், நான் வைத்திருக்கும் அதே ‘Hero Honda’ வண்டி, நான் வளமையான அணியும் வெள்ளை நிற சேர்ட்டை தொலைவில் இருந்து பார்த்து, சுடப்பட்டுக் கிடப்பது நான்தான் என்று நினைத்து ஓடிச்சென்று பாடசாலையில் இருந்த எனது மனைவியிடம் செய்தி சொன்னார். தொலைபேசி ஊடாக ‘அது நான் அல்ல’ என்ற செய்தி அறிந்தும் கூட, கதறியபடி எனது மனைவி நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்த காட்சி இன்றைக்கும் எனது கண்களின் முன்பு அப்படியே நிற்கின்றது.

நடேசன் அண்ணின் வித்துடல் அவரது பிறந்த ஊரான நெல்லியடிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அவருடைய பூதவுடலுடன் மட்டக்களப்பைவிட்டுச் சென்ற துரை அண்ணன் திரும்ப வரவேயில்லை. அவரது உடலுடன் கிளம்பிய தவராஜா கொழும்பிலேயே தங்கிவிட்டார். நடேசன் அண்ணன் இறந்து ஆறு நாட்களில் நானும் மட்டக்களப்பை விட்டுச் சென்றேன். நிலாவினி(சார்ளி) திரும்பிவந்த செய்தியை வெளியிட்டுவிட்டு வேதாவும் வெளியேறினார். கிழக்கு ஊடகத்துறையின் மிகப் பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஜசிகரனும், ‘தமிழ் அச்சு’ என்றொரு அச்சகத்தை தாண்டவன்வெளியில் நிறுவிவிட்டு கொழும்பில் சென்று தங்கியிருந்தார்.

நடேசன் அண்ணனின் படுகொலையை புகைப்படம் எடுத்த சந்திரபிரகாசும் மட்டக்களப்பை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

சிவராம் அண்ணன் மட்டக்களப்புக்கு வருவதை குறைத்துக்கொண்டார்.

அரியமும், ஜெயாணந்தமூர்த்தியும் நாடாளுமன்ற அரசியலுக்கு நுழைந்திருந்தார்கள்

நடேசன் அண்ணனின் மரணத்துடன் உருவான மட்டக்களப்பின் ஊடகத்துறை வெற்றிடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமலேயே இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை கவனமாகப் பேணவேண்டிய அரசியல், இராணுவத் தேவையும் அங்கு களத்தில் இருந்தவந்தது.

ஆனால் அந்த வெற்றிடம் கொஞ்சம் கொஞ்சமாக தற்பொழுது நிரப்பப்பட்டு வருகின்றது என்கின்ற திருப்தி சில இளைஞர்களின் எழுத்துக்களைப் பார்க்கின்ற பொழுது எனக்கு ஏற்படுகின்றது.

– நன்றி – ஊடகவியலாளர் நிராஜ் டேவிட், IBC Tamil

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more