உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் பயிற்சி முகாம் ஒன்று, தாக்குதல் நடாத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் திருகோணமலை – மூதூர் பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளது.
சஹ்ரானின் பிரதான சகாவாக கருதப்படும், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு மற்றும் வனாத்துவில்லு ஆயுத களஞ்சிய விவகாரத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும், மாவனெல்லையைச் சேர்ந்த மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் எனும் நபரிடம் காவல்த்துறையினர் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய, குறித்த சந்தேக நபரை மூதூர் பகுதிக்கு அழைத்து சென்று குறித்த பயிற்சி முகாம் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
15 ஏக்கர் வரை விசாலமான, குறித்த இடம் விவசாய நிலமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த காணிக்கு மாவனெல்லையைச் சேர்ந்த ஒருவரே சொந்தக் காரர் எனவும் தெரிவிக்கும் சி.ஐ.டி. அதிகாரி, குறித்த இடத்தில் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களும் தற்போது சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. தடுப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளில், மூதூரில் உள்ள அந்த இடத்தில், சஹ்ரானின் ஆலோசனை பிரகாரம் ரி 56 ரக துப்பககிகளை கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும் ஒரு வருடத்துக்கு பின்னர் இந்த முகாம் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பில் உள்ள பிரதான சந்தேக நபர்கள் விடயங்களை தொடர்ந்து மறைத்து வருவது தெரியவருவதாகவும், ஏற்கனவே அங்கு பயிற்சி பெற்ற இளைஞர்கள் கைதாகியுள்ளதால் அந்த பயிற்சி முகாம் தொடர்பில் மேலதிக விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிய முடிகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு துருக்கி ஊடாக சிரியா சென்ற ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றுள்ள சாதிக் அப்துல்லாஹ் எனும் குறித்த சந்தேக நபர், அங்கிருந்து திரும்பியதும் இந்த பயிற்சி முகாமை ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளின் மூலமாக தெரிகின்றது.
குறித்த சந்தேக நபர் அவரது சகோதரரான சாஹித் அப்துல்லாஹ், தந்தையான இப்ராஹீம் மெளலவி ஆகியோர் மாவனெல்லை பகுதி புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்திலும் பிரதான சந்தேக நபர்களாக உள்ளனர்.
அவர்கள் முஸ்லிம் இளைஞர்களை அடிப்படை வாதத்தின் பால் இட்டுச் சென்று பயிற்சி நெறிகளை ஒவ்வொரு பகுதிகளிலும் மிக சூட்சுமமாக தலைமைத்துவ பயிற்சி என்ற ரீதியில் கொண்டு சென்றுள்ளமை தொடர்பில் ஏற்கனவே விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு மாவனெல்லை நீதிவான் நீதிமன்றுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.