நாளுக்கு நாள் இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொடர்பாக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொடர்பில் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கெரியா, நியூஸிலாந்து மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகள், நாளாந்தம் அதிகமான கொரோனா தொற்று பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும், இதனால் இந்த நாடுகளின் செயற்பாட்டை இலங்கையும் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செயற்றிட்டத்தின் மூலம் நோயாளர்களை இலகுவாக விரைவில் அடையாளங் கண்டு கொள்ள முடியும் எனவும், நோய் பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் தற்போது நாளாந்தம் சுமார் ஆயிரம் பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும், எனினும் குறைந்த பட்சம் மூவாயிரம் பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
அத்துடன், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள வசதிகளை சுகாதாரத்துறை அமைச்சு மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்காக முடிந்தளவு புதிய செயற் திட்டங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.