இலங்கையில் முதல் தடவையாக கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பது தொடர்பில் கவனம் அதிகம் செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே இன்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
முதலாவது தடுப்பூசியை செலுத்தி ஒரு மாத காலத்தின் பின்னர் அடுத்த தடுப்பூசியை செலுத்த எதிர்ப்பார்த்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சுமார் மூன்று மாதங்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுவதன் ஊடாக உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சாத்தியமுள்ளமை சில ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசி போடும் செயற்றிட்டம் ஆனது தொடர்ந்து முன்னெடுப்பது இந்த வார இறுதிக்குள் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது அரச சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் தனியார் சுகாதார தரப்பினருக்கு தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா தடுப்பு அமைச்சர் கூறியுள்ளார்.