போலி ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் இருவருக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளி நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையர்களான 21 வயதான புஸ்பராஜ் கபில் மற்றும் 32 வயதான ராமசந்திரன் கிஷ பிரசாத் ஆகிய இருவருக்கே தலா 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு மற்றும் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டை என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், சிங்கப்பூர், டுவாஸ் சோதனைச்சாவடியில் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி சந்தேக நபரொவருர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவருக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் மற்றைய சந்தேகநபர் கைது செய்யப் பட்டுள்ளார்.
இவர்கள் அகதி அந்தஸ்த்து கோரி கனடா செல்வதற்காக போலி ஆவணங்களை தயார் செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, இருவருக்கும் சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.