உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள 101 மாணவர்கள் நாளைய தினம் இலங்கைக்குஅழைத்து வரப்பட உள்ளனர்.
இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள மாணவர்களே இவ்வாறு அழைத்துவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து 443 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த அனைவரையும் 4 கட்டங்களாக இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் முதற்கட்டமாக, பாகிஸ்தானின் லாஹுர் மற்றும் கராச்சியிலிருந்த 113 மாணவர்கள் நேற்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து, இரண்டாம் கட்டமாக இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள 101 மாணவர்கள் நாளைய தினம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
யூ.எல் 146 எனும் இலக்க விமானத்தில் இவர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக எமது விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்றாம் கட்டமாக இந்தியாவின் கோயம்புத்தூரில் தங்கியுள்ள 117 மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.
குறித்த மாணவர்கள், யூ.எல் 194 எனும் இலக்க விமானத்தில் நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதே தினத்தில் யூ.எல் 1425 எனும் இலக்க விமானத்தில் நேபாளத்தின் காத்மண்டுவில் தங்கியுள்ள 93 மாணவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
மேலும், வெளி நாடுகளில் சிக்கியுள்ள வைத்தியர்கள் சிலரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் அனைவரையும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.