அரசாங்கம் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி – பதில் அறிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில்…..
வடக்கில் ஒரேயொரு பரிசோதனை நிலையம் மட்டும் இயங்குகின்றது.பல நிலையங்களை அமைத்து கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் துரிதகதியில் வடக்கில் நடைபெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி அந்த கலைத்தல் ஆணையைக் கைவாங்கி பாராளுமன்றத்தைத் தொடர்ந்து இயங்க வைப்பதே தற்போது உசிதமாகத் தென்படுகின்றது.அதைவிட்டு வைத்தியத் துறையினர் கொரோனா முற்றாக அழிந்துவிட்டது தேர்தல் நடத்தலாம் என்று உண்மையான அறிக்கையொன்றைத் தந்தால் மே 23ஆம்; திகதி நடத்தலாம்.
ஆனால் தேர்தலுக்கு வரும் மக்கட் தொகை எவ்வாறிருக்கும் என்பது பாரிய புதிராக அமையும்!
தற்பொழுது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற மிகப்பெரிய சவால் கொரோனா ஆபத்தை முற்றாக நீக்கி இயன்ற அளவு விரைவாக சகஜ நிலையை ஏற்படுத்துவதுதான்.
இதன் பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியும். ஆகவே மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது என்பதே எனது கருத்து. எமக்கு பாராளுமன்றப் பதவிகளோ அரசியலோ தற்போது முக்கியமல்ல மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.