50 நாடுகளில் உள்ள 6300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பது உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 16 அன்று 3,336 ஆக இருந்த நிலையில் கடந்த 8- 9 நாட்களில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யும் அரச நடவடிக்கையில், சடுதியாக அதிகரித்துவரும் தொற்று எண்ணிக்கை கடுமையான சவாலாக உள்ளது.
கோவிட் -19 தொற்றினால் வெளிநாடுகளில் ஏற்பட்ட இந்திய நாட்டினரின் இறப்புகளின் எண்ணிக்கையும் இந்த காலகட்டத்தில் 25 ல் இருந்து 40 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொற்றுக்கு இலக்காகியிருப்பவர்கள் உள்ளனர்.
சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.