தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 395 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக (Containment Zone) அடையாளப்படுத்தப்பட்டு, அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியே வந்து செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் யாரும் வெளியே செல்லாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் 112 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவும், போக்குவரத்துக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 273 கட்டுப்பாட்டுப் பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு, கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment Zone) உள்ள வீடுகளில் நாள் தோறும் மாநகராட்சி மருத்துவ குழுவினர் சென்று சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா என ஆய்வு செய்து வருகின்றனர்.அத்தோடு இந்த பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணித்து உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 20,19,711 வீடுகளிலும் பொதுமக்களுக்கு சளி , இருமல் மற்றும் காய்ச்சல் ஏதேனும் அறிகுறிகள் உள்ளனவா என மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு கணக்கீடு எடுக்கும் பணிகளும் நடைபெற்றுவருகொன்றது, இந்த பணிகளுக்காக மாநகராட்சியின் சார்பில் 15,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.