சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 168 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது. சென்னையில் இதுவரை 523 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி வசமுள்ள உள்ள 15 மண்டலங்களிலும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் வீடு, தெரு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை முழுமையாக சென்னை மாநகராட்சி முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அப்பகுதியில் உள்ள அனைவரையும் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தி, பரிசோதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 17 அன்று 84 இடங்களாக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், இன்று மேலும் 84 இடங்கள் அதிகரித்து 168 ஆக உள்ளன. அதேபோல், ஏப்ரல் 17 அன்று 228 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை, நேற்று 523 ஆக அதிகரித்து உள்ளதும் கவனிக்கத்தக்கவை.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 46 இடங்களும், திரு.வி.க நகரில் 28 இடங்களும், தேனாம்பேட்டையில் 26 இடங்களும், தண்டையார்பேட்டையில் 22 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், கோடம்பாக்கத்தில் 9 இடங்களும், திருவொற்றியூரில் 8 இடங்களும், வளசரவாக்கத்தில் 7 இடங்களும், பெருங்குடியில் 6 இடங்களும், அண்ணாநகரில் 4 இடங்களும், மாதவரத்தில் 3 இடங்களும், அடையாரில் 3 இடங்களும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூரில் 2 இடங்களும், அம்பத்தூர் மற்றும் மணலியில் தலா ஒரு இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.