கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு எதிர்வரும் மே 3 ஆம் திகதிவரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக மராட்டியத்தில் வேலையிழந்த ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மும்பையில் குடிசைப்பகுதிகளை கொரோனா தாக்கி வருவதால் ஏழை மக்கள், வெளிமாநில தொழிலாளர்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

ஏற்கனவே நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிந்தது. இந்தநிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக மராட்டியத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். 14/04/2020 மதியம் 3 மணியளவில் மும்பை பாந்திரா ரெயில் நிலையம் அருகே வீதியில் 1,000-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் திரண்டனர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு வாகன வசதி செய்து தரவேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
ரெயில் நிலையம் அருகே திரண்டவர்கள், அருகே உள்ள குடிசைப்பகுதிகளில் வசித்து வரும் தினக்கூலிகள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள். போராட்டத்தில் ஈடுபட்ட இந்த தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.