கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாக பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ராஜீவ் பஜாஜுடன் கலந்துரையாடினார்.
அப்போது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக மீண்டும் கூறினார்.
ராகுல் காந்தி மேலும் பேசியதாவது:
இதுபோன்று உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். உலகப் போரின்போது கூட, இந்த அளவுக்கு முடக்க நிலை ஏற்பட்டதில்லை. அப்போது கூட அனைத்தும் திறந்திருந்தன என்று நினைக்கிறேன்.
இது ஒரு மிகப்பெரிய பேரழிவு. இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தபிறகு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து தான், ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது என கூறுகிறேன்.
உலகிலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு நோய் அதிகரிப்பது இங்குதான். தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.
அத்துடன் பொறுப்பை மாநிலங்களுக்கு விட்டுவிடப்போகிறது” இவ்வாறு ராகுல் பேசினார்.