ஆசியாவின் மிகப்பெரிய சேரி மும்பையின் தாராவியில் 220 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஆறு புதிய தொற்றுக்கள் இப்பகுதியில் இருந்து பதிவாகியுள்ளன – வியாழக்கிழமை 25 புதிய தொற்றுக்கள் பதிவாகியிருந்தன.
மொத்தம் 2.1 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட தாராவி சேரியில், சுமார் 8 லட்சம் பேர் வரை வசிக்கின்றனர். நோய்த் தொற்றானது காட்டுத்தீபோல பரவ வாயுப்புக்கள் உள்ள நிலையில் நோய்த்தடுப்புக்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மிகவும் சனநெருக்கம் கொண்ட சேரிபகுதியில் தனிமைப்படுத்தால் என்பது முற்றிலும் சாத்தியமற்றநிலையில் தொற்றினைக் கட்டுப்படுத்த பெரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாராவியினுள் பல கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களை (containment zones) அமைத்ததுடன் பெருந்தொகையான பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசியப் பொருட்களை வீட்டுக்கு வீடாகக் கொண்டுசெல்லப்பட்டுக் கொடுக்கப்படுகின்றன.
தாராவியில் உள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அடக்கப்பட்டுள்ளனர், மருந்துகள் அவர்களின் வீட்டு வாசலில் வழங்கப்படுகின்றன. நகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து 50,000 க்கும் மேற்பட்டவர்களை இதுவரை பரிசோதனை செய்துள்ளனர்.