ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள நோவயா ஜெம்லயா தீவுக்கு அருகே பேரன்ட்ஸ் கடலில் உள்நாட்டின் மீன்பிடி கப்பல் ஒன்று மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. கப்பலில் மீனவர்கள் 19 பேர் இருந்தனர்.
மீனவர்கள் கடலில் பிடிபட்ட மீன்களுடன் வலையை கப்பலுக்கு இழுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் கப்பல் திடீரென கடலில் கவிழ்ந்தது.
கவிழ்ந்த வேகத்தில் கப்பல் உடனடியாக நீரில் மூழ்கத் தொடங்கியது. இதனால் மீனவர்களால் கப்பலில் இருந்த உயிர்காக்கும் கருவிகளை எடுக்க முடியாமல் போனது. இதனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களும் நீரில் மூழ்கினர்.
இதற்கிடையில் ரஷ்யா கடலோர காவல்படை தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 2 மீனவர்களை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. மற்ற 17 மீனவர்களும் நீரில் மூழ்கி மாயமாகினர்.
இருப்பினும் மீட்புக்குழுவினர் முழு நம்பிக்கையுடன் அவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.