கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாளாந்த எண்ணிக்கைகள் ஒவ்வொரு நாட்டினாலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகின்றன. இருப்பினும் வெளியிடப்படும் அதிகாரப்பூரவமான தரவுகளைவிட இன்னும் பன்மடங்கு இறப்பின் தொகை இருக்கும் என்பது சமீபகாலமாக அவதானிகளால் ஊகிக்கப்பட்டிருந்தது.
நாளாந்த எண்ணிக்கைகளை திட்டமிட்டுக் குறைப்பதற்கு உலக அரசியல், அரசின் நிலை, நாட்டு மக்களிடையே ஏற்படக்கூடிய குழப்பம் என பல காரணிகள் உள்ளன. இவற்றை விட, இன்னும்மோர் காரணியும் உண்டு என்பது சமீபத்தில் பிரான்ஸ் அரசின் செயலால் உறுதியாகியுள்ளது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
“02/04/2020 அன்று திடீரென பிரான்ஸ் தனது நாளாந்த இறப்பை (01/04/2020) 1355 ஆக பதிவு செய்தது. இதுவரை எந்தவொரு நாட்டிலும் ஒரு நாளில் இறப்பானது ஆயிரம் எண்ணிக்கையை கடக்கவில்லை என்பதால், பிரதான ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இவ்விடயம் பகிரப்பட்டது.
இச்செய்தியினை கூர்ந்துநோக்குவோமாகில், 461 மாத்திரமே 01/04/2020 அன்று மரணித்தவர்கள். ஏனைய 884 பேரும் வைத்தியசாலைகளுக்கு வெளியே காப்பகங்களில் பல்வேறு நாட்களில் கோவிட்-19 நோய்த்தாக்கம் காரணமாக இறந்து தற்போது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அதேபோன்று 15/04/2020 அன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 1 438பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சடுதியான இந்த உயிரிழப்பு தொடர்பில் சுகாதாரத்துறை மேலாளர் தெரிவிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 514 பேர் மருத்துமனைகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மிகுதி 924 பேர்களின் உயிரழப்பு கடந்த 24 மணிநேரத்தில் மூதாளர் இல்லங்களில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள் உட்பட முன்னராக வீடுகளிலும், பிற மருத்துவமையங்களிலும் உயிரிழந்தவர்களின எண்ணிக்கை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆக இதுவரை நாளாந்த எண்ணிக்கையானது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்கள் மாத்திரமே, வைத்தியசாலையில் அனுமதிக்காமல் கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் எண்ணிக்கை நாளாந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காரணியால் அணைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை தற்போது உள்ள அறிக்கையினை விட பலமடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.