நாட்டில் இன, மத, மொழி, கட்சி, குல வேறுபாடின்றி குடிநீர்ப்பிரச்சினையை முகங்கொடுக்கும் அனைத்து பிரஜைகளுக்கும் குடிநீரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
நேற்றையதினம்(14) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குடிநீர் பிரச்சினைகளை ஆராயும் நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படாத பிரதேசங்களுக்கு எதிர்வரும் 5 வருடங்களில் குடிநீர் வழங்கும் பொறுப்பு எமது அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில் இதுவோர் சவால்மிக்க விடயமாகும். இருப்பினும் அச்சவாலினை பொறுப்பேற்று மக்களது தேவைகளை நிறைவேற்ற நாம் உரிய செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொண்டுவருகின்றோம். இம்மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அதிக சிறுநீரக நோயாளிகள் உள்ளனர்.
இதற்குரிய மூல காரணம் தூய குடிநீர் இல்லையென்று மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள கூறினார். எனவே இதனை முக்கிய விடயமாக கருத்திற்கொண்டு உரிய குடிநீர் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
பொதுமக்கள் குறித்த பிரச்சினைகளை தமக்கு உரிய மாவட்ட அரசியல் தலைமையின் சிபாரிசுடன் முன்வைக்கவும். அதற்கான நிதியை தான் பெற்றுத்தருகின்றேன். தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் மூலம் குடிநீர்வசதியற்ற கிராமங்களின் குடிநீர்த்தேவை எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும். மக்கள் வழங்கப்படும் குடிநீர் வழங்கல் திட்டத்தை பொறுப்புடன் பராமரித்த்ல் வேண்டும்.
இதனை முறையாக உரிய அதிகாரிகள் கண்காணித்தல் வேண்டும். கடந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல குடிநீர் வழங்கல் திட்டம் முறையான திட்டம் மற்றும் பராமரிப்பின்மையால் தற்போது செயல் இழந்து காணப்படுகின்றது. எனவும் தெரிவித்தார்.