சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு பிற ஊழியர்களிடம் இருந்து பிரிக்கப்படுவதாகவும் அதேநேரம் இந்நோய்க்கான அறிகுறி இல்லாதவர்கள் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தால் அவர்களும் சோதிக்கப்படுவர் என கொவிட்-19 கிருமிப் பரவலை எதிர்கொள்ளும் அமைச்சுகள் பணிக்குழு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் உடல்நிலை சீராக உள்ள 7,000 ஊழியர்கள் தங்களது தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு ராணுவ முகாம்கள் உள்ளிட்ட மற்ற இருப்பிடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் இக்குழு தெரிவித்தது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் என அறிவிக்கப்பட்ட ஊழியர் தங்கும் விடுதிகளிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட 1,500 க்கும் அதிகமான ஊழியர்களுக்குக் கடந்த வாரயிறுதியில் சோதனை செய்யப்பட்டது. அத்துடன் அடுத்த சில நாட்களில் சுமார் 5,000 ஊழியர்களும் பரிசோதிக்கப்படுவர் என அமைச்சுகள் பணிக்குழு தெரிவித்துள்ளது.

“இக்கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களைக் கண்டுபிடிப்பதில் கடப்பாடு கொண்டுள்ளோம். இவர்களை எந்தக் கவனிப்புமின்றி தனியாக விட்டுவைக்க நினைக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்ல விரும்புகிறோம்,” என்று சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகளின் இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மாக் (Professor Kenneth Mak) தெரிவித்துள்ளார்.
“சில விடுதிகளில், நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தவர்களை ஆராயும் பணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். உதாரணத்திற்கு அவர்கள், ஒரே அறையைப் பகிரும் சக ஊழியர்களாக இருக்கக்கூடும். அத்தகைய தங்குமிட சூழலில் வாழ்வதால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நெருக்கத்தின் காரணமாக அதிக அபாயத்தை எதிர்நோக்குவதாகக் கருதப்படுகிறது.
வெவ்வேறு சூழல்களிலும் வெளிநாட்டு ஊழியர்கள் பலரை நாங்கள் சோதனை செய்திருக்கிறோம். ஊழியர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட தங்குமிடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றும்போது அந்த இடங்களும் நோய்ப்பரவல் இடங்களாக மாறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்திருக்கிறோம்,” என இணைப் பேராசிரியர் கென்னத் மாக் தெரிவித்துள்ளார்.