கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் நாடு முடக்கப்பட்டுள்ள வேளையில், முடக்க ஆணையை மீறுவோர் சுட்டுத்தள்ளப்படலாம் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டேர்டே(Rodrigo Duterte) எச்சரித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 2 அன்று ஆற்றிய உரையில், மருத்துவ ஊழியர்களைத் துஷ்பிரயோகம் செய்வது மிகக் கடுமையான குற்றம் என்றும் அது ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்தார். மேலும் நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அரும்பாடுபட்டு வரும் வேளையில், தனிமைப்படுத்தப்படும் உத்தரவை நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடித்து ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை கொரோனா வைரசினால் 107 பேர் மரணித்துள்ளதுடன் 2,633 பேர் கிருமித்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
“நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த போலிசுக்கும் ராணுவத்துக்கும் எனது கட்டளை என்னவென்றால், கட்டுப்பாட்டை மீறுவோரால் பிரச்சினை ஏற்பட்டு, அவர்கள் உங்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்த முற்பட்டால், அவர்களைச் சுட்டுத்தள்ளுங்கள்” என்றும் “கிருமித்தொற்றின் தொடர்பில் மருத்துவ சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்ச்சி அதிகரித்து வருவதால் அவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் தாக்கப்படுகின்றனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றும் அதிபர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
மணிலாவில் ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அரசாங்க உணவு உதவி தொடர்பில் அங்குள்ள குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சிலர் கைது செய்யப்பட்ட பிறகு, அதிபர் டுட்டர்டேயின் இக்கடும் எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளார். அதிபரின் இந்த ஆணை, வன்முறையைத் தூண்டக்கூடும் என்று மனிதாபிமான ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன் இதுபோன்ற ஆணையை அதிபர் டுட்டர்டே, போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் அறிவித்தநிலையில் போதைப்பொருளை விற்கும் அல்லது பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிபர் டுட்டர்டேயின் எச்சரிக்கை பொது ஒழுங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறதே தவிர, யாரும் இதன் தொடர்பில் சுடப்படமாட்டார்கள்,” என்று பிலிப்பீன்ஸ் தேசிய போலிஸ் படையின் தலைவர் தெரிவித்தார்.