4000 இற்கும் அதிகமான படைவீரர்களை தங்கியுள்ள அமெரிக்க விமானந்தாக்கிக் கப்பல் USS தியோடோர் ரூசெவேல்ட் (Theodore Roosevelt) இல், 100 இக்கும் அதிகமான படைவீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கப்பலின் கப்டன் குரோசியர்(Captain Crozier) அமெரிக்க படையதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குவாம் தீவில் நங்கூரம் இடப்பட்டுள்ள USS தியோடோர் ரூசெவேல்ட்விமானந்தாக்கிக் கப்பலில் குறுகிய காலப்பகுதியில் இத்தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் குறுகிய நடைபாதைகள், சிறிய அறைகள் போன்ற விடயங்களினால் படையினரை கப்பலை விட்டு முழுமையாக வெளியேற்றினால் மாத்திரமே சரியான முறையில் அவர்களை தனிமைப்படுத்தி, தொற்று நோயில் இருந்து அவர்களைக் காக்க முடியும் என மேலும் தெரிவித்துள்ள கப்டன் குரோசியர் (Captain Crozier), “நாம் (கப்பல்) தற்போது யுத்தத்தில் ஈடுபடாத நிலையில், அநியாயமாக ஒருவரும் இறக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
அந்நிய கடற்பரப்பில் அமெரிக்காவின் அதிமுதன்மையான அணு விமானந்தாக்கிக் கப்பலில் இருந்து அதன் படையினரை முழுமையாக வெளியேற்றுவது என்பது மிகவும் கடினமானதும், இதுவரை வரலாற்றில் நடைபெறாத விடயம் என்பதும், கப்பலின் பாதுகாப்பு, 4000 இற்கும் மேற்பட்ட படையினரின் தனிமைப்படுத்தலுக்கான இடவசதிகள் என பல சிக்கல்கள் அமெரிக்க ராணுவம் எதிர்நோக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியானது முதலாவதாக San Francisco Chronicle வெளியிட்ட நிலையில் ஏனைய செய்தி ஊடகங்களும் தற்போது அதனை உறுதிசெய்துள்ளன. அமெரிக்கபடைத்தரப்பின் அதி உச்சக்குழு இக்கப்பலின் நிலை குறித்து உன்னிப்பாகஅவதானித்து வருவதாக அமெரிக்க கப்பல்படையின் பேச்சாளர் Reuters news agency இடம் தெரிவித்துள்ளார்.