இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து கோரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.
அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இந்த இரண்டு தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்திய மருந்து தரக்கட்டுப்பட்டு அமைப்பு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியையடுத்து, இன்னும் சில நாட்களில் இந்தியாவில் கோரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனுமதி அளிக்கப்பட்டதற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது என்பதை பிரதமர் மோடி கூறியது தொடர்பான செய்தியை மேற்கோள் காட்டி பில்கேட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகள் கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்துவரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவியலின் புதுமையான கண்டுபிடிப்புகளிலும், தடுப்பூசி உற்பத்தியும் மேற்கொள்வது சிறப்பாக உள்ளது.