சீனா, குறைந்த தரத்திலான மற்றும் போலி கொரோனா வைரஸ் ஆன்டிபாடி சோதனை கருவிகளை அமெரிக்காவிற்கு அனுப்புவதாகவும், தொற்றுநோயிலிருந்து “லாபம் ஈட்டுவதாகவும்” வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ (Peter Navarro) குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா வைரசுக்கெதிரான நடவடிக்கையில் விநியோக வேலைகளை சீர்திருத்தும் வேலைகளுக்குப் பொறுப்பாக பீட்டர் நவரோ அவர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அமேரிக்காவில் நோய்க்கான பரிசோதனையும், கொரோனா வைரஸின் நோய் எதிர்ப்பு ஆன்டிபாடி பரிசோதனைகளும் மிகவும் அவசியம் எனவும், அதன் மூலமே அமேரிக்காவில் தற்ப்போது உள்ள முடக்கலை தளர்த்தலாம் எனவும் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப்படும் போலி மற்றும் குறைந்த தரத்திலான சோதனைக்கருவிகள் பரிசோதனை நடவடிக்கைகளையும், ஆய்வுத் தரவுகளையும் சீர்குலைக்கும் ”என்று நவரோ மேலும் தெரிவித்துள்ளார்
வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதலாவதாக தொற்றினை ஏற்படுத்தியிருந்தது, அவர்கள் (சீனா) அதை ஆறு வாரங்களுக்கு மறைத்து வைத்து , வைரசை உலகின் பிற பகுதிகளுக்கும் பரப்பியதாக நவரோ குற்றம் சாட்டியுள்ளார்.
“அவர்கள் அதை வுஹானில் வைத்திருக்க முடியும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நூறாயிரக்கணக்கான சீனர்கள் மிலான், நியூயார்க் மற்றும் பிற இடங்களுக்கு விமானத்தில் ஏறி அதை உலகம் முழுவதும் விதைத்தனர்” என மேலும் கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ உள்ளிட்ட அனைத்து அமெரிக்க குற்றச்சாட்டுகளையும் சீனா நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீனாவிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்த 6.5 இலட்சம் பரிசோதனைக் கருவிகள் தவறான தரவுகளைக் கொடுப்பதால் இந்தியா முழுதும் பரிசோதனைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.