கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களால் “கேம் சேஞ்சர்” என்று கூறப்பட்ட மலேரியா மருந்து, அமரிக்க படைவீரர் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு எந்த நன்மையையும் வழங்கவில்லை என்பதுடன், அதன் பாவனையால் தீமை ஏற்படலாம் என மேலதிக ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.
கொரோனா வைரசிற்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் தற்போது இல்லை. ஆனால் பல தசாப்தங்கள் பழமையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine) COVID-19 சுவாச நோயின் போக்கை மாற்றும் முயற்சியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
படைவீரர் சுகாதார நிர்வாகத்தின் (VA) தரவுகளின் பகுப்பாய்வில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்கப்பட்ட 97 நோயாளிகளில் 28% பேர் இறந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் ஆண்டிபயாடிக் அஜித்ரோமைசின் (antibiotic azithromycin) கொடுக்கப்பட்ட 113 நோயாளிகளில் இறப்பு விகிதம் 22% ஆகும். இதேவேளை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பெறாத 158 நோயாளிகளில் இறப்புவிகிதம் 11% ஆகும்.
மேற்படி ஆய்வறிக்கையானது முழுமையான மருத்துவ ஆய்வறிக்கை அல்ல. (VA) மையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 368 ஆண்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்து, இணையத்தில் ஆராய்ச்சியாளர்களுக்காக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையாகும்.
இதேவேளை கடந்த 07/04/2020 அன்று உலகின் 70 வீதமான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் உற்பத்தியாளரான இந்தியா, மருந்தின் ஏற்றுமதி மீதான தடையை உடனடியாக கைவிடாவிட்டால் “பதிலடி கொடுப்பதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததை அடுத்து 36 இலட்சம் மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்ய இந்திய அரசு இணங்கியது. இதற்கமைய 12/04/2020 அன்று ஒரு தொகுதி மருந்து அமெரிக்காவினை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.