உலக சுகாதார அமைப்புக்கு (WHO) கொரோனா வைரஸ் தொற்றுநோயினைக் கையாண்டமுறையில் தமக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அதற்காக அமெரிக்கா வழங்கும் நிதியினை தற்காலிகமாக நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump ) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில், உலக சுகாதார அமைப்பு அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்றுள்ளது, அதற்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும்” எனவும் அத்துடன் வைரஸைப் பற்றி சீனாவின் “தவறான தகவலை” உலக சுகாதார அமைப்பு பரப்புவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா உலக சுகாதார அமைப்போடு தொடர்ந்து ஈடுபடும் என்றும் கொரோனா வைரஸ் மற்றும் சீனா பற்றிய எச்சரிக்கைகளை அமெரிக்கா மதிப்பாய்வு செய்யும் போது நிதியுதவி மீதான “பிடி” தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து WHO உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
கடந்த வாரம் டிரம்பின் முந்தைய அச்சுறுத்தல்களுக்கு ஜெனீவாவில் செய்தியாளர் கூட்டத்தில் பதிலளித்த WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom) “அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் தங்கள் மக்களைக் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும். தயவுசெய்து இந்த வைரஸை அரசியலாக்க வேண்டாம். நீங்கள் இன்னும் அதிகமான பிணப்பைகளை உபயோகிக்க விரும்பினால், நீங்கள் அதைச் செய்யுங்கள். நீங்கள் விரும்பவில்லை என்றால், அதை அரசியலாக்குவதைத் தவிர்க்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ள டெட்ரோஸ், WHO “சீனாவை மையமாகக் கொண்டது” என்ற ட்ரம்பின் கருத்தினை முழுமையாக நிராகரித்துள்ளார்.