அமெரிக்க கடற்படையின் ஏவுகணைத்தாங்கிக் கப்பலில் குறைந்த பட்சம் 18 மாலுமிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 24/04/2020 உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானம் தாங்கி கப்பல் தியோடர் ரூஸ்வெல்ட் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கப்பலில் இருந்த சுமார் 4,800 பணியாளர்களில் கிட்டத்தட்ட 850 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அவர்களில் ஒருவர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் தடுப்புப் பணியில் இருந்த யூ.எஸ்.எஸ் கிட் (USS Kidd) என்னும் கப்பலே வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளது எனவும் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கடற்படை அதிகாரி கருத்துத்தெரிவித்துள்ளார்.
பசிபிக் பகுதியில் ரோந்தில் உள்ள கப்பலுக்கு சிறப்பு மருத்துவ குழு ஒன்று கப்பலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், கப்பல் துறைமுகத்திற்குத் திரும்பத் தயாராகி வருவதாகவும், அது சுத்தம் செய்யப்படும் எனவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ஹாஃப்மேன் (Jonathan Hoffman) கூறியுள்ளார்.