மும்பை அருகே உள்ள காமத்திபுரா பகுதியில் 1960களில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், பாலியல் தொழில் என்று நிழல் உலக பெண் தாதாவாக வாழ்ந்தவர் கங்குபாய் கத்தியவாதி. பின்னர் போலீசில் சரண் அடைந்து பொது மன்னிப்பு பெற்றார். அதன் பிறகு பாலியல் தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட உழைத்தார்.
இவரது வாழ்க்கை புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தை தழுவி சஞ்சய் பன்சாலி படம் இயக்கி வருகிறார். இதில் கங்குபாயாக ஆலியா பட் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கங்குபாயின் மகன் பாபுஜி ராவ்ஜி ஷா படத்துக்கு தடை விதிக்கும்படி மும்பை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கங்குபாய் பற்றி அவதூறு காட்சிகள் படத்தில் இடம்பெற்று உள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 7ம் ந்தேதிக்கு ஒத்திவைத்தது.